யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே நிகழ்நிலை (Online) வழியாக சாட்சியம் வழங்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வை ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லலித் மற்றும் குகன் யாழ்ப்பாணத்தின் ஆவரங்கால் பகுதியில் மர்மமாக காணாமல் ஆக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் 2012ஆம் ஆண்டு ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
பின்னர் 2017ஆம் ஆண்டு சாட்சியாளர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்சேவின் பெயர் இணைக்கப்பட்டதுடன் நேரில் ஆஜராகி சாட்சியம் வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது. எனினும் பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணம் வர முடியாது என அவர் தொடர்ந்து தெரிவித்த நிலையில் தனது சட்டத்தரணிகள் ஊடாக இணையவழி சாட்சியத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் கோட்டாபய ராஜபக்சே நிகழ்நிலை ஊடாக மன்றில் தோன்றி சாட்சியம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.













Leave a Reply