கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் ஆக்ரா ஓயா ஆற்றில் மூழ்கி காணாமல் போயிருந்த 15 வயது பாடசாலை மாணவன் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவன் லிந்துலை பாடசாலையில் கல்வி கற்று வந்த மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நண்பர்களுடன் மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றிருந்தபோது தவறி நீரில் விழுந்து காணாமல் போனதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறை நுவரெலியா காவல்துறை கடற்படை பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் இன்று அவரது சடலம் மீட்கப்பட்டது.
லிந்துலை திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.













Leave a Reply