உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் புதிதாக மேலும் மூன்று எபோலா நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் தற்போது பதிவான மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. புதிய நோயாளிகளில் முதல் பாதிக்கப்பட்டவரை கொண்டு சென்ற வாகன ஓட்டுநர் அவருக்கு சிகிச்சையளித்த சுகாதார ஊழியர் மற்றும் காங்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தொடர்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த எபோலா பரவல் நிலைமையை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் அரிதான Bundibugyo வகை எபோலா வைரஸ் காரணமாக பிராந்திய ரீதியிலான ஆபத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை இல்லாத நிலையும் சவாலாக பார்க்கப்படுகிறது.
உகாண்டா அரசு தற்போது நோயாளிகளுடன் தொடர்புடையவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் காய்ச்சல், உடல்வலி, வாந்தி, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் இந்த புதிய பரவல் மேலும் தீவிரமடையுமா என்ற அச்சம் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.





Leave a Reply