அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் விரிவுபடுத்தியதையடுத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலக எரிசக்தி போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் தாக்கமாக பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.34 அமெரிக்க டொலர் அதிகரித்து 78.35 அமெரிக்க டொலராகவும் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் 2.21 அமெரிக்க டொலர் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 73.62 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக ஈரான் முன்னதாக அறிவித்திருந்த போதிலும் அது வணிகக் கப்பல் போக்குவரத்துக்காக திறந்தே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், சமீபத்திய கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி நேற்று வெறும் ஆறு கப்பல்கள் மட்டுமே அந்த நீரிணையை கடந்துள்ளமை கடந்த ஐந்து வாரங்களில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். மேலும்,அண்மையில் கையெழுத்தான அமெரிக்கா–ஈரான் இடைக்கால ஒப்பந்தத்தின் எதிர்காலமும் தற்போதைய பதற்றத்தால் கேள்விக்குறியாகியுள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வெளியிட்ட அறிக்கையின்படி உலகளாவிய எண்ணெய் விநியோகம் அதிகரித்திருந்தாலும் போர் தொடங்குவதற்கு முன்பிருந்த அளவை விட இன்னும் குறைவாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக எண்ணெய் சந்தையில் நிலவும் உறுதியற்ற தன்மை மேலும் நீடிக்கும் என சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.













Leave a Reply