ஜப்பான் நிலநடுக்கம், ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள குமமோட்டோ (Kumamoto) நகரில் இன்று (28) ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன் சில இடங்களில் தீப்பற்றிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் கைபேசி தொடர்பு சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிவேக தொடருந்துகள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதோடு குமமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக TSMC, Sony மற்றும் Fujifilm உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆரம்பத்தில் சுமார் ஒரு மீற்றர் உயரத்தில் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. அதேவேளை அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என ஜப்பான் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்த சில நாட்களில் பிந்தைய அதிர்வுகள் மற்றும் மண்சரிவு அபாயம் நீடிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.













Leave a Reply