சவுதி அரேபியா வில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளம் தாமதமாகும் சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து சவுதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது.
அமைச்சகத்தின் தகவலின்படி தொழிலாளரும் முதலாளியும் கையெழுத்திட்ட வேலை ஒப்பந்தம் சட்டரீதியாக அமல்படுத்தக்கூடிய ஆவணமாக (Enforceable Document) இருந்தால் சம்பளப் பாக்கியைப் பெறுவதற்கான விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக 2025 அக்டோபருக்குப் பிறகு Qiwa தளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட வேலை ஒப்பந்தங்கள் அமல்படுத்தக்கூடிய ஆவணங்களாக கருதப்படுகின்றன.
அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டலின்படி முதலில் தொழிலாளர்கள் தங்களது வேலை ஒப்பந்தம் அமல்படுத்தக்கூடிய ஆவணமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் சம்பளம் முழுமையாக 30 நாட்களுக்கு மேல் தாமதமானால் அல்லது 90 நாட்களுக்கும் மேலாக பகுதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டால் தொழிலாளர்கள் நீதித்துறை அமைச்சகத்தின் Najiz மின்னணு தளத்தின் மூலம் நேரடியாக அமலாக்கக் கோரிக்கையை (Enforcement Request) சமர்ப்பிக்க முடியும்.
இதன் மூலம் நீண்டகால தொழிலாளர் நீதிமன்ற வழக்குகளைத் தவிர்த்து சம்பளத்தை விரைவாகப் பெறுவதற்கான சட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், சவுதியின் Wage Protection System (WPS) மற்றும் Mudad மின்னணு கண்காணிப்பு அமைப்புகள் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை நேரத்தில் செலுத்துகிறார்களா என்பதை கண்காணித்து வருகின்றன.
சம்பள தாமதம் ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படுவதுடன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சம்பளம் வழங்கப்படாவிட்டால் சில அரசு சேவைகள் நிறுத்தப்படலாம்.
மூன்று மாதங்கள் தொடர்ந்து சம்பளம் வழங்கப்படாத நிலையில் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் முடக்கப்படுவதோடு ஊழியர்கள் முதலாளியின் அனுமதி இல்லாமலேயே வேறு நிறுவனத்திற்கு பணிமாற்றம் பெறும் உரிமையும் பெறலாம்.
சவுதி அரேபியா மனிதவள அமைச்சகம் தொழிலாளர்கள் தங்களது சம்பள உரிமைகள் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அமைதியாக இருக்காமல் Qiwa மற்றும் Najiz போன்ற அதிகாரப்பூர்வ தளங்களைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும் சம்பளத் தாமதங்களை குறைக்கவும் வேலை ஒப்பந்தங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உதவும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.





Leave a Reply