ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு கடற்பாதையில் ஒமான் கடல் எல்லைக்குள் பயணித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) என்ற இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலின் காரணமாக இரண்டு கப்பல்களிலும் தீ விபத்து ஏற்பட்டதுடன் குறிப்பிடத்தக்க அளவில் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரகம் “அப்பட்டமான தாக்குதல்” என்று கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இதற்கு தக்க பதிலடி வழங்குவதற்கான முழு உரிமையும் தங்களுக்கு இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













Leave a Reply