கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 வயதான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சபரிவர்மன் கைது செய்யப்படும் போது முழு உடல்நலத்துடன் இருந்த நிலையில் நீதிமன்றக் காவலில் இருந்தபோதே உயிரிழந்தது காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
எந்தக் குற்றம் செய்தவராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் காவல் அல்லது சிறைக் காவலில் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் முந்தைய ஆட்சிகளில் நடைபெற்ற காவல் மரணங்களுக்கு எதிராக குரல் கொடுத்த தற்போதைய முதல்வர் விஜய் இந்தச் சம்பவம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பது அதிகாரத் திமிரா என கேள்வி எழுப்பிய சீமான்.
சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.













Leave a Reply