வைத்தியசாலை தாக்குதல், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று (28) மாலை நோய்வாய்ப்பட்ட யுவதியொருவர் குடும்பத்தினரால் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவருடன் வந்திருந்த பலர் அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயிலில் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் நோயாளியின் தாயாரைத் தவிர ஏனையோர் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர் சம்பவத்தை தங்களது கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்ததுடன் அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்ப்பு தெரிவித்தபோது ஒருவர் அவரை பின்னால் இருந்து பிடித்துக் கொண்டிருக்க மற்றொருவர் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் தனது பாதுகாப்பு சேவை நிறுவனத்திற்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













Leave a Reply