சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் 40 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது அவசியமானதாக இருப்பதால் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நடைமுறை முதற்கட்டமாக ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தப்படுவதுடன் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அதன் விளைவுகள் மீளாய்வு செய்யப்பட்டு தொடர்வதா இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த இலவச விசா திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 40 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசா கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது.
அதேவேளை தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகளை கருத்தில் கொண்டு மின்னணு பயண அங்கீகார முறை (ETA) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த முறைமையின் ஊடாகவே விசா பெறும் நடைமுறை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். இந்த புதிய தீர்மானம் இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













Leave a Reply