அமெரிக்கா முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ புகைக்கு கனடாவின் வன மேலாண்மை குறைபாடே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கனடாவில் ஏற்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காட்டுத்தீகளில் இருந்து எழும் அடர்ந்த புகை அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முதல் வடகிழக்குப் பகுதி வரை பரவி காற்றுத் தரத்தை கடுமையாக பாதித்துள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்த்து வீடுகளுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் கூடுதல் செலவுகளை கனடியப் பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சுங்கவரிகளுடன் சேர்த்து வசூலிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் கனடா தனது காடுகளை முறையாகப் பராமரிக்கத் தவறியதால் அசுத்தமான மற்றும் ஆரோக்கியமற்ற காற்று அமெரிக்காவிற்குள் நுழைகிறது என்றும் இது கனடாவின் திட்டமிட்ட அலட்சியம் என்றும் அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை கனடாவின் அவசரகால மேலாண்மை மற்றும் சமூக மீள்திறன் அமைச்சர் எலினோர் ஓல்செவ்ஸ்கி 2020ஆம் ஆண்டு முதல் வனப் பாதுகாப்பு மற்றும் காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக 12 பில்லியன் கனடிய டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எல்லைப் பகுதிகளில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அமெரிக்கா–கனடா இணைந்து நீண்டகாலமாக செயல்பட்டு வருவதாகவும் பதிலளித்துள்ளார்.













Leave a Reply