ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் எதிர்காலத்தில் எதிர்நோக்கப்படக்கூடிய சவால்களையும் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். தனித்தனியாகவும் பிரிந்து செயல்படும் அரசியல் அணுகுமுறைகள் தற்போதைய சூழலில் பயனளிக்காது எனக் குறிப்பிட்ட அவர் நாட்டின் நிலைத்தன்மை ஜனநாயக நடைமுறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த அரசியல் தரப்புகளுக்கு இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய அரசியல் மற்றும் சமூக சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஒருமித்த தேசிய அணுகுமுறை அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பான விடயங்களும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் சத்திர சிகிச்சைக்கு உட்பட்ட பின்னர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள இந்த கருத்து எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட முக்கிய அரசியல் சைகையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.













Leave a Reply