செம்மணி புதைகுழி யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 41ஆவது நாளாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்மூலம் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை உள்ளடக்கிய 95 நாட்கள் அகழாய்வில் மொத்தம் 478 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 464 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய அகழாய்வில் மூன்று என்புக் குவியல்கள் ஆணிகள் மற்றும் சீமெந்து துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டன.
இதற்கிடையில் 467ஆவது என்புக்கூடு இதுவரை கண்டறியப்படாத வகையில் சவப்பெட்டியின் தடயங்களுடன் காணப்பட்டதுடன் அதில் மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் மழை அங்கியை ஒத்த ஆடை மற்றும் கால் பகுதியில் காலுறை இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக் கணிப்பின்படி அது சிறுவரின் என்புக்கூடாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது சட்டரீதியான அடக்கமா அல்லது வேறு சூழ்நிலையா என்பது குறித்து நீதிமன்றத்தின் வழிகாட்டலின் கீழ் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக நாளை மேலும் தெளிவான தகவல்களை வழங்க முடியும் என சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.













Leave a Reply